ஸ்ரீவில்லிபுத்தூர் தொகுதியில் போட்டியிட "சீட்' வாங்கித் தருவதாக 25 லட்ச ரூபாய் வாங்கிக் கொண்டு, வேறு ஒருவருக்கு "சீட்' வாங்கித் தந்து விட்டதாகவும், பணத்தை திருப்பித் தரவில்லை என்றும், அமைச்சர் சாத்தூர் ராமச்சந்திரன் மீது, தி.மு.க. நகரச் செயலர் கோஸ், போலீசில் புகார் கொடுத்ததோடு, வத்திராயிருப்பு அருகே உண்ணாவிரதம் இருக்க முயன்றார். அவரை போலீசார் கைது செய்தனர்.
விருதுநகர் மாவட்டம் கூமாப்பட்டி தி.மு.க. நகரச் செயலர் கோஸ் தேர்தல் பணிகளில் தனக்கு "பணப்பொறுப்பு' வழங்கப்படவில்லை என, அதிருப்தியில் இருந்தார். இரு தினங்களுக்கு முன், அமைச்சர் சாத்தூர் ராமச்சந்திரனை கண்டித்து உண்ணாவிரதம் இருக்கப்போவதாகவும், அதற்கு அனுமதி கோரியும் கூமாப்பட்டி போலீசில் மனு கொடுத்தார்.அம்மனுவில், "அமைச்சர் சாத்தூர் ராமச்சந்திரன் எனக்கு ஸ்ரீவில்லிபுத்தூர் தனித் தொகுதிக்கு "சீட்' பெற்றுத் தருவதாகக் கூறி, 25 லட்ச ரூபாய் வாங்கினார். ஆனால், வேறொருவருக்கு (துரை) சீட் பெற்று தந்துவிட்டார்ர். என்னிடம் வாங்கிய பணத்தை திருப்பித் தரவில்லை. இதற்காக உண்ணாவிரதம் இருக்கப் போகிறேன்” என தெரிவித்திருந்தார்.
தேர்தல் முடியும் வரை இதற்கு போலீசார் அனுமதி தர மறுத்தனர். ராமசாமியாபுரத்தில் நேற்று காலை 11 மணிக்கு உண்ணாவிரதம் இருக்க வந்த இவரை, வத்திராயிருப்பு இன்ஸ்பெக்டர் நாகராஜன் கைது செய்தார்.
பணம் தந்ததற்கான ஆதாரம் எதுவும் கோஸ் என்பவரிடம் இல்லை. அந்தளவிற்கு பணம் தருவதற்கு கோசுக்கு வசதியும் இல்லை. "ஸ்டன்ட்' அடிப்பதற்காக புகார் தந்து உண்ணாவிரதம் இருக்க முயன்றார் என்று போலீஸ் தரப்பில் கூறப்படுகிறது.
இது குறித்து அமைச்சர் சாத்தூர் ராமச்சந்திரன் கூறியபோது, அவருக்கு 25 லட்ச ரூபாய் தருவதற்கு தகுதி உண்டா; அவரை தேர்தல் பணி செய்ய வேண்டாம் என தெரிவித்துள்ளோம்;! வேறு சிலரிடம் தேர்தல் பணி ஒப்படைக்கப்பட்டுள்ளது என்றார்.
No comments:
Post a Comment