Monday, 11 April 2011

குஜராத் மோடி அரசுக்கு எதிராக ஊழல் எதிர்ப்பு பிரச்சாரம் நடத்த அன்னா ஹஸாரேவுக்கு அழைப்பு

modi.corruption
அஹ்மதாபாத்:குஜராத் பிரதேச காங்கிரஸ் கமிட்டியின் தலைவர் அர்ஜுன் மோத்வாடியா , அம்மாநிலத்தை ஆளும் மோடி அரசுக்கெதிராக ஊழல் எதிர்ப்பு பிரச்சாரம் மேற்கொள்ள காந்தியவாதி அன்னா ஹஸாரேவுக்கு அழைப்பு விடுத்துள்ளார்.

இந்தியாவில் ஊழல் ஆட்சியாளர்களை விசாரணைச் செய்யும் லோக்பால் மசோதாவை நிறைவேற்றக்கோரி காந்தியவாதியும், சமூக ஆர்வலருமான அன்னா ஹஸாரே உண்ணாவிரதப் போராட்டம் நடத்தி அதில் வெற்றியும் கண்டுள்ளார். பின்னர் அவர் பேட்டியளிக்கையில், அனைத்து மாநிலங்களுக்கும் சென்று ஊழலுக்கு எதிராக போராட்டம் நடத்தப்போவதாக அறிவித்திருந்தார். இதனை கருத்தில் கொண்டு குஜராத் மாநில காங்கிரஸ் தலைவர் மோதிவாடியா அன்னா ஹஸாரேவை குஜராத் மாநிலத்தில் ஊழலை எதிர்த்து பிரச்சாரம் செய்ய அழைப்பு விடுத்துள்ளார்.
இதுக்குறித்து அவர் மேலும் கூறியதாவது: “நரேந்திர மோடியின் அரசு ஒரு லட்சம் கோடி ஊழல் புரிந்துள்ளது. இந்த ஊழல் கடந்த பத்தாண்டுகளாக குஜராத்தை மோடி தலைமையிலான பா.ஜ.க அரசு ஆட்சிபுரியும் வேளையில் நடந்ததாகும். சுஜ்லாம் சுஃப்லாம் யோஜ்னா திட்டத்தில் ஏறத்தாழ ஆயிரம் கோடி ரூபாய் ஊழல் நடந்துள்ளது. டாட்டாவின் நானோ கார் திட்டத்திற்கு அனுமதியளித்ததால் அரசுக்கு 31 ஆயிரம் கோடி இழப்பு ஏற்பட்டுள்ளது. பிபபாவ் பவர் நிறுவனம் மற்றும் ஸ்வான் எனர்ஜி நிறுவனத்திற்கும் குஜராத் அரசுக்கும் இடையே நடந்த ஒப்பந்தத்தின் வாயிலாக 10 ஆயிரம் கோடி ரூபாய் அரசுக்கு இழப்பு ஏற்பட்டுள்ளது.

அன்னா ஹஸாரே லோக்பால் மசோதாவுக்காக போராடினார். ஆனால் கடந்த 7 ஆண்டுகளாக மோடி அரசு ஆட்சியாளர்களின் ஊழலை விசாரிக்கும் ‘லோகாயுக்தா’வை இதுவரை நடைமுறைப்படுத்தவில்லை. இவ்வாறு மோத்வாடியா தெரிவித்துள்ளார்.

லோகாயுக்தாவை நியமித்தால் தனது ஊழல் சந்தி சிரிக்கும் என பயந்துதான் அதனை நடைமுறைப்படுத்தாமல் இருந்து வருகிறார் மோடி. சொந்த நாட்டு குடிமக்களான பல்லாயிரக்கணக்கான முஸ்லிம்களை கொடூரமாக கொலைச் செய்வதற்கு தலைமை வகித்த மோடி, தற்பொழுது அம்மாநிலத்தில் முஸ்லிம்களை இரண்டாந்தர குடிமக்களாக நடத்திவருகிறார். மாநிலத்தை கொள்ளையடிப்பதிலும், குடிமக்களை கொலைச்செய்யத் தூண்டுவதிலும் கைத்தேர்ந்த மோடி தமிழக சட்டமன்றத் தேர்தலில் போட்டியிடும் பா.ஜ.க வேட்பாளரை ஆதரித்து பிரச்சாரம் செய்யும் வேளையில் ஊழலைக் குறித்தும், குடும்ப ஆட்சியைக் குறித்தும் ரொம்பவே அலட்டிக்கொண்டார். வேதம் ஓதுவது கேடுகெட்ட சாத்தான் என்பது தமிழ வாக்காளர்களுக்கு தெரியாதா என்ன?

No comments:

Post a Comment