
அபித்ஜான்:தேர்தலில் தோல்வியுற்ற பிறகும் அதிபர் பதவியிலிருந்து விலகாத பாக்போ கைது செய்யப்பட்டுள்ளார். கடந்த சில மாதங்களாக நிலவிய ஸ்திரத்தன்மையற்ற சூழல் மற்றும் உள்நாட்டு மோதல்களின் இறுதியில் அதிபரின் மாளிகையை சுற்றிவளைத்து பாக்போ கைது செய்யப்பட்டுள்ளார்.
பிரான்ஸ் நாட்டு படையின் துணையுடன் தற்போதைய அதிபர் அல் ஹஸன் வத்ராவின் ஆதரவு படையினர் பாக்போவை கைது செய்த பிறகு சிறையிலடைத்துள்ளனர். பாக்போவின் உதவியாளர் வெளியிட்ட இச்செய்தியை பிரான்ஸ் நாட்டு தூதர் உறுதிச்செய்துள்ளார்.
அல் ஹஸன் வத்ராவின் தலைமையகமான அபித் ஜானில் கோல்ஃப் ஹோட்டலுக்கு பாக்போவை கொண்டு சென்றுள்ளதாகவும் செய்திகள் கூறுகின்றன.
கடந்த நவம்பர் மாதம் நடந்த அதிபர் தேர்தலில் தோல்வியுற்ற பாக்போ பதவி விலக மறுத்துவந்தார். தேர்தலில் வெற்றிப்பெற்ற அல் ஹஸன் வத்ராவின் ஆதரவாளர்கள் மீது தனது ராணுவ ஆதரவாளர்கள் மூலம் தாக்குதலையும் நடத்திவந்தார் பாக்போ.
சிவிலியன்களுக்கெதிராக தாக்குதல் நடத்தும் முன்னாள் அதிபருக்கெதிராக அல் ஹஸன் வத்ராவுக்கு உதவவேண்டுமென ஐ.நா பிரான்சிடம் கோரிக்கை விடுத்திருந்தது. பாதுகாப்பாக வெளியேற உதவலாம் என்ற கோரிக்கையை பாக்போ ஏற்க மறுத்ததால் அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
No comments:
Post a Comment