Monday, 11 April 2011

முபாரக் மற்றும் மகன்களுக்கு எதிராக சம்மன்

mubarak&gamel
கெய்ரோ:பதவி விலகிய எகிப்தின் சர்வாதிகாரி ஹுஸ்னி முபாரக் மற்றும் அவரது குடும்பத்தினரை விசாரணைச் செய்ய வேண்டுமென்ற கோரிக்கை அந்நாட்டில் வலுவடைந்துள்ளதைத் தொடர்ந்து முபாரக் மற்றும் அவரது மகன்களை விசாரணைச் செய்வதற்காக அரசு தரப்பு வழக்கறிஞர்கள் சம்மன் அனுப்பியுள்ளனர்.

ஜனநாயகரீதியாக போராட்டம் நடத்தியவர்கள் மீது தாக்குதல் நடத்தியது மற்றும் அரசு பணத்தை கொள்ளையடித்தது தொடர்பாக விசாரணைச் செய்வதற்காகத்தான் இந்த சம்மன் அனுப்பப்பட்டுள்ளது.
தனக்கெதிராக நடப்பது பொய் பிரச்சாரம் என தெரிவித்த முபாரக், வெளிநாட்டிற்கு தான் பொதுச் சொத்தை கடத்தவில்லை என அல் அரேபியா தொலைக்காட்சியின் மூலமாக தெரிவித்திருந்தார். முபாரக்கின் இப்பேட்டிக்கு பிறகு அவருக்கு எதிராக சம்மன் அனுப்பப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

முபாரக் மற்றும் அவரது மகன்களை விசாரணை செய்யும்  வேளையில் பாதுகாப்பு வசதிகள் செய்யப்படும் என உள்துறை அமைச்சர் மன்சூர் இஸ்ஸாவி அறிவித்துள்ளார்.

எப்பொழுது விசாரணைக்கு ஆஜராகவேண்டுமென அறிவிக்கவில்லை எனவும், விசாரணைக்கு தயாராகவிட்டால் கைது செய்வதுதான் எகிப்து உள்துறை அமைச்சரின் முடிவு என அல்ஜஸீரா தெரிவித்துள்ளது.

பதவியிலிருந்து விலகிய பிறகு முபாரக் மற்றும் அவரது குடும்பத்தினர் செங்கடலுக்கு அருகில் அமைந்துள்ள வாசஸ்தலமான ஷரம் அல் ஷேக்கில் வசித்து வருகின்றனர். அதேவேளையில் தஹ்ரீர் சதுக்கத்தில் திரண்டிருந்த பல்லாயிரக்கணக்கான மக்கள் முபாரக்கை விசாரணைச் செய்யவேண்டுமென கோரிக்கை விடுத்துள்ளனர்.

முபாரக்கிற்கு உதவ முயலும்  பாதுகாப்பு அமைச்சரையும், ராணுவத்தையும் தண்டிக்க வேண்டுமென போராட்டத்தில் ஈடுபட்டோர் வலியுறுத்தினர். போராட்டத்தின் துவக்கத்தில் மிருதுவான அணுகுமுறையைக் கையாண்டதன் மூலம் பாராட்டப்பட்ட எகிப்திய ராணுவம் முபாரக் பதவி விலகியபிறகு தேர்தல் நடவடிக்கையை தாமதப்படுத்தி வருகிறது. மேலும் மனித உரிமைகளை மீறிவருவதாகவும் குற்றஞ்சாட்டப்படுகிறது.

No comments:

Post a Comment