
திரிபோலி:லிபியாவில் கடந்த இரண்டு மாதங்களாக தொடரும் எதிர்ப்பு போராட்டத்தை முடிவுக்கு கொண்டுவருவதற்கான தங்களுடைய முயற்சி வெற்றியடைந்துள்ளதாக ஆப்பிரிக்க யூனியனின் மத்தியஸ்த குழு தெரிவித்துள்ளது. இக்குழுவின் தலைவரான தென்னாப்பிரிக்க அதிபர் ஜேக்கப் சுமா கத்தாஃபி அரசு ஆப்பிரிக்க யூனியன் தலைவர்களின் அமைதி உடன்படிக்கையை ஏற்றுக்கொண்டதாக அறிவித்துள்ளார்.
மவுரிட்டானியாவிலிருந்து ஞாயிற்றுக்கிழமை திரிபோலிக்கு வந்த ஆப்பிரிக்க யூனியன் குழுவினர் தலைநகரான திரிபோலியில் வைத்து முஅம்மர் கத்தாஃபியுடன் பேச்சுவார்த்தை நடத்தினர். பல மணிநேரங்கள் நீண்ட பேச்சுவார்த்தையின் இறுதியில் கத்தாஃபி சமாதான உடன்படிக்கைக்கு ஒப்புக்கொண்டதாக சுமா அறிவித்துள்ளார்.
எதிர்ப்பாளர்களின் செல்வாக்கு மிகுந்த பெங்காசிக்கும் ஆப்பிரிக்க மத்தியஸ்த குழுவினர் சென்றுள்ளனர். ஆனால், கத்தாஃபி பதவியிலிருந்து விலகாமல், ராணுவத்தை வாபஸ்பெறாமல் போர் நிறுத்தத்திற்கு தயாரில்லை என எதிர்தரப்பு தலைவர் அறிவித்துள்ளார்.
உடனடியாக போர் நிறுத்தத்தை அறிவிப்பது, நாட்டில் வெளிநாட்டினரை பாதுகாப்பது, நாட்டின் ஸ்திரத்தன்மைக்காக அரசும், எதிர்ப்பாளர்களும் பேச்சுவார்த்தைக்கு தயாராகுதல், மேற்கத்திய படையினரின் விமானத்தாக்குதலை முடிவுக்குக் கொண்டுவருதல் உள்ளிட்ட நிபந்தனைகளை மத்தியஸ்த குழு முன்வைத்தது.
ஜேக்கப் சுமா தென்னாப்பிரிக்காவுக்கு திரும்பியதைத் தொடர்ந்து தென்னாப்பிரிக்காவின் வெளியுறவு அமைச்சர் பெங்காசிக்கு சென்றுள்ள மத்தியஸ்த குழுவில் இடம்பெற்றுள்ளார்.
லிபியாவின் பிரச்சனைகளுக்கு தீர்வு காண்பதற்கான மத்தியஸ்த குழுவினரின் முயற்சியை நேட்டோ படையின் செய்தித் தொடர்பாளர் வரவேற்றுள்ளார்.
அஜ்தாபியில் எதிர்ப்பாளர்களுக்கு எதிராக கத்தாஃபியின் ராணுவத்தினர் வலுவான தாக்குதலை கட்டவிழ்த்து விட்டுள்ளனர். ஞாயிற்றுக்கிழமை மட்டும் கத்தாஃபி ராணுவத்தின் 25 டாங்கர்களை அழித்ததாக நேட்டோ கூறுகிறது.
No comments:
Post a Comment