
சென்னை இராயப்பேட்டை புதுக் கல்லூரியில் நேற்று செவ்வாய்க்கிழமை, 2011-ம் ஆண்டுக்கான ஹஜ் பயணம் செல்லும் பயணிகளை குலுக்கல் மூலம் தேர்வு செய்யும் நிகழ்ச்சி நடைபெற்றது.
இந்நிகழ்ச்சியில் தமிழகம் முழுவதும் இருந்து வந்திருந்த சுமார் 1,500 ஹஜ் பயணிகள் கலந்து கொண்டனர். தமிழக பிற்படுத்தப்பட்டோர் நலத் துறைச் செயலாளர் சந்தானம், தமிழக ஹஜ் குழு செயல் அலுவலர் அலாவுதீன், குழு உறுப்பினர்கள் ஆகியோரும் கலந்து கொண்டனர்.
இந்நிகழ்ச்சிக்கு, தமிழக ஹஜ் குழுத் தலைவர் அபுபக்கர் தலைமை வகித்தார். பிற்படுத்தப்பட்டோர் நலத் துறை அமைச்சர் டி.கே.எம்.சின்னையா நிகழ்ச்சியைத் துவக்கி வைத்து பேசியபோது, ”இந்த ஆண்டு தமிழகத்தில் இருந்து ஹஜ் பயணத்துக்கு 3,049 பேர் செல்லவுள்ளனர்.
மத்திய அரசிடம் வலியுறுத்தி அடுத்த ஆண்டு தமிழகத்துக்கு கூடுதல் இட ஒதுக்கீடு பெற்றுத்தர தமிழக அரசு முயற்சிகள் மேற்கொண்டு வருகிறது”. இவ்வாறு கூறினார்.
தமிழக ஹஜ் குழுத் தலைவர் அபுபக்கர் கூறியதாவது: ”2010ஆம் ஆண்டில் 2,994 பேர் ஹஜ் பயணம் மேற்கொண்டனர். அரசின் கூடுதல் ஒதுக்கீட்டின்போது 4,147 பேர் சென்றனர்.
இந்த ஆண்டு ஹஜ் பயணத்துக்கு தமிழகத்தில் இருந்து 10,458 பேர் விண்ணப்பித்திருந்தனர். அவர்களில் குலுக்கல் மூலம் மத்திய அரசு தமிழகத்துக்கு ஒதுக்கிய 3,049 பேர் பயணத்துக்குத் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.
70 வயதுக்கு மேற்பட்ட பயணிகள் அவருடன் ஒருவர் சேர்ந்து செல்லும் சிறப்பு திட்டத்தின் கீழ் குலுக்கல் இன்றி நேரடியாகத் தேர்வு செய்யப்பட்டனர். இவ்வகையில் தேர்வு செய்யப்பட்ட ஹஜ் பயணிகள் 980. மீதமுள்ள 2,069 பேர் பொது ஒதுக்கீட்டின் கீழ் தேர்வு செய்யப்பட்டனர்.
மீதமுள்ள சுமார் 7,400 பேர் காத்திருப்போர் பட்டியலில் வைக்கப்பட்டு கூடுதல் ஒதுக்கீட்டின்போது தேர்வு செய்யப்படுவர். தமிழகத்துக்கு கூடுதல் ஹஜ் பயண இட ஒதுக்கீடு செய்ய மாநில அரசு முயற்சி மேற்கொள்ள வேண்டும்.” இவ்வாறு கூறினார்.
No comments:
Post a Comment