காஸா மீதான சட்டவிரோத முற்றுகையை முறியடித்து பலஸ்தீன் பொதுமக்களின் அவல வாழ்வுக்கு ஒரு முற்றுப்புள்ளி வைக்குமுகமாக ரஃபா எல்லைக் கடவையைத் திறந்து, பலஸ்தீன் கைதிகளை விடுவிக்க முன்வருமாறு எகிப்து அரசாங்கத்திடமும் அதன் இராணுவக் கவுன்ஸிலிடமும் "ஃபிரெண்ட்ஸ் ஒஃப் ஹியுமானிட்டி இண்டர்நெஷனல்" எனும் சர்வதேச அமைப்பு கோரிக்கை விடுத்துள்ளது.
சர்வதேச மனித உரிமைச் சட்டங்களுக்குப் புறம்பான முறையில் சுமார் 63 மாதகாலமாக இடம்பெற்றுவரும் காஸா மீதான தொடர் முற்றுகையின் விளைவால் அங்கு வாழும் பலஸ்தீன் பொதுமக்கள் சொல்லொணாத் துன்பங்களை அனுபவித்து வருவதாகவும் அவர்களின் அன்றாட சுமுக வாழ்வு பெரிதும் சீர்குலைந்திருப்பதாகவும் மேற்படி அமைப்பு தெரிவித்துள்ளது.
மேலும், மனிதாபிமான அடிப்படையில் எகிப்திய சிறைச்சாலைகளில் உள்ள பலஸ்தீன் கைதிகளை உடனடியாக விடுவித்து அவர்கள் தத்தமது குடும்பத்தவரைச் சென்றடைவதற்கு உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ள முன்வருமாறு எகிப்தின் அதிகாரத் தரப்பினரை நோக்கி மேற்படி சர்வதேச அமைப்பு அழைப்பு விடுத்துள்ளது.
"காஸா மீது மேற்கொள்ளப்பட்டிருக்கும் மிகக் கடுமையான முற்றுகையின் விளைவால் பொதுமக்களின் அன்றாடப் போக்குவரத்து முற்றாக ஸ்தம்பிதமடைந்துள்ளதோடு, அத்தியாவசியப் பொருட்களைப் பெற்றுக்கொள்வதிலும் பலஸ்தீன் பொது மக்கள் பெரும் சிரமங்களை எதிர்கொண்டு வருகின்றனர். இந்நிலைமை சர்வதேச மனித உரிமைகள் மற்றும் மானுட விழுமியங்களுக்கு முற்றிலும் எதிரானதாகும்" என்று 'ஃபிரெண்ட்ஸ் ஒஃப் ஹியுமானிட்டி இண்டர்நெஷனல்' அமைப்பு வலியுறுத்தியுள்ளது.
No comments:
Post a Comment