
நேற்று காலை, சென்னையிலிருந்து டில்லிக்கு வந்தார் கருணாநிதி. காலை, 11.30 மணிக்கு, டில்லி விமான நிலையம் வந்து சேர்ந்த அவர், அங்கிருந்து நேராக கான்மார்க்கெட் அருகில் உள்ள தாஜ்மான்சிங் நட்சத்திர ஓட்டலுக்கு விரைந்தார்.
அங்கு, தி.மு.க ., எம்.பி.,க்கள் சிலருடன் சிறிது நேரம் ஆலோசனை நடத்தினார். சிறிய ஓய்வுக்கு பின், மாலை, 5 மணிக்கு, ஓட்டலை விட்டு கிளம்பினார். அவருடன் ராஜாத்தி, கனிமொழியின் கணவர் அரவிந்தன், டி.ஆர்.பாலு ஆகியோர் உடன் சென்றனர்.
இரண்டு கார்கள் மற்றும் ஒரு எஸ்.பி.ஜி., வாகனம் புடைசூழ, திகார் சிறைக்கு சென்ற கருணாநிதி, சரியாக, 5.45 மணிக்கு உள்ளே சென்றார். மீடியாக்கள் குவிந்திருந்த கேட்டை தவிர்த்து விட்டு, வேறுவழியாக, கருணாநிதியும், அவருடன் வந்தவர்களும் உள்ளே சென்றனர்.
தன்னை சந்திக்க வந்த தந்தை கருணாநிதியை பார்த்ததும் கனிமொழி சற்று உணர்ச்சி வசப்பட்டு கண்கலங்கியதாகக் கூறப்படுகிறது. அவருக்கு, பயப்படாமல் இருக்கும்படி கருணாநிதி ஆறுதல் கூறியதாகத் தெரிகிறது. நீண்ட இடைவெளிக்குப்பின் சந்திக்கும் ராஜாவிடமும் சில நிமிடங்கள் பேசிய கருணாநிதி, அவருக்கும் ஆறுதல் தெரிவித்தார். பின்னர், சரத்குமார் ரெட்டியிடமும் ஆறுதல் தெரிவித்துவிட்டு, தனது, 45 நிமிட சந்திப்பை முடித்துக் கொண்டு கருணாநிதி வெளியே வந்தார்.
ஓட்டலில் தங்கியிருந்த கருணாநிதியை, மத்திய உள்துறை அமைச்சர் சிதம்பரம் நேற்றிரவு சந்தித்துப் பேசினார். ஏற்கனவே, கருணாநிதி சென்னையில் அளித்த பேட்டியில், சோனியாவை சந்திக்கப் போவதில்லை' என, கூறியிருந்தார். சோனியா, நேற்று ஒரு நாள் அவசரப் பயணமாக காஷ்மீர் சென்றிருந்தார். பிரதமர் மன்மோகனும் எத்தியோபியா பயணம் மேற்கொண்டிருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
இதற்கிடையில், ஸ்பெக்ட்ரம் வழக்கு நடைபெறும் பாட்டியாலா கோர்ட்டில் ஆஜராக, நேற்று, கனிமொழி வந்த போது, அவரை மத்திய ரசாயன அமைச்சர் அழகிரி மனைவி காந்தியும், அவரது மகன் துரை தயாநிதியும் சந்தித்தனர். கனிமொழி நிலைகண்டு கலங்கினார் காந்தி. அங்கிருந்த ராஜாத்தியுடனும் காந்தி பேசினார். அதேநேரத்தில், முன்னாள் துணை முதல்வர் ஸ்டாலினும் நேற்றிரவு டில்லி வந்தார்.
No comments:
Post a Comment