Wednesday, 25 May 2011

எங்களைவிட யாரும் விரைவாகச் செயல்பட முடியுமா? - ஜெயலலிதா!

தமிழக முதலமைச்சராக பதவி ஏற்றபிறகு வாரம் ஒருமுறை செய்தியாளர்களைச் சந்திப்பதாக உறுதியளித்திருந்த முதல்வர் ஜெயலலிதா, நேற்று செய்தியாளர்களின் கேள்விக்குப் பதில் அளித்தார். அதன் விவரம்:

 எதிர்பாராதவிதமாக அமைச்சர் மரியம் பிச்சை உயிரிழந்ததால் திருச்சி செல்ல வேண்டியதாகிவிட்டது. எனவே இன்று உங்களை சந்திக்கிறேன்.

தமிழக மின் தட்டுப்பாட்டை நீக்க எங்கள் அரசு துரித நடவடிக்கை எடுத்து வருகிறது. விரைவில் நல்ல மாற்ற வரும். இதற்கு மேல் சொல்ல விரும்பவில்லை.
 

பெட்ரோலிய பொருட்களின் விலை உயர்வே எல்லா விலைவாசி உயர்வுக்கும் காரணம்.தமிழகம் மட்டுமின்றி இந்தியா முழுவதும் மக்கள் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகி உள்ளனர்.பெட்ரோலிய பொருட்களின் விலை மீண்டும் உயர்த்தப்படும் என்று அறிவித்திருப்பது மிகவும் கண்டத்திற்குரியது. இதனை கைவிட வேண்டும் என்று மத்திய அரசை கேட்டுக் கொள்கிறேன்.

கட்டுமானப் பொருட்களின் விலையை மட்டுமின்றி ஒட்டுமொத்த விலைவாசியையும் குறைக்க நடவடிக்கை எடுத்து வருகிறோம்.

நாங்கள் பதவி ஏற்று சில நாட்கள்தான் ஆகி இருக்கிறது. அரசின் நிதி நிலை குறித்து பல்வேறு துறைகள் மூலம் ஆய்வு செய்து வருகிறோம். ஆய்வு முடிந்த பிறகுதான் நிதி நிலைமை பற்றி தெரிய வரும். தேவைப்பட்டால் வெள்ளை அறிக்கை வைக்கப்படும்.

தமிழகத்தில் ஒவ்வொரு முறையும் திமுக ஆட்சிக்கு வரும்போது மேலவை கொண்டு வர முயற்சி எடுக்கிறது. அதிமுக ஆட்சிக்கு வரும்போது மேலவை வேண்டாம் என்று ரத்து செய்கிறது.புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர். ஆட்சியில் இருந்த போதுதான் மேலவை தேவை இல்லை என்று கலைத்தார். அது தேவை இல்லை என்பதுதான் அதிமுகவின் கொள்கை. அதில் மாற்றம் இல்லை. மேலவை வராமல் இருக்க என்ன செய்ய வேண்டுமோ அதை நாங்கள் செய்வோம்.

கேபிள் டிவி அரசுடமையாக்கப்படுவது மற்றும் அரசு கேபிள் வருமா? என்று கேட்கப்பட்டபோது, பதவி ஏற்று 8 நாட்களே ஆகிறது. வாக்குறுதிகள் அனைத்தும் நிறைவேற்றப்படும். மற்ற மாநிலங்களில் இன்னும் பதவி ஏற்பு விழாக்கள்தான் நடந்து கொண்டு இருக்கின்றன. நாங்கள் மிகவும் விரைவாக செயல்படுகிறோம். இந்த அளவுக்கு யாரும் செயல்பட முடியுமா? என்று கூறினார்.

No comments:

Post a Comment