Saturday, 21 May 2011

ஜும்ஆ பயான்-சுவர்கம் வேண்டுமா? நரகம் வேண்டுமா? சிந்தியுங்கள்

புதுவலசையில் 20.5.2011 வெள்ளிகிழமை அன்று அல் மஸ்ஜிதுல் ஜாமிஆ பள்ளியில் ஜும்ஆ பயான் நடைபெற்றது. இதில் சகோதரர் இஸ்மாயில் ஆலிம் அவர்கள் சொர்க்கத்தையும், நரகத்தையும் பற்றி உரையாற்றினார்கள்.

உபதேசம் செய்யும் பொழுது மக்கள் தற்போதைய செய்திகளை இணைத்து பேசுவதையே விரும்புகின்றனர். முஃமிங்களாகிய நம்  சொர்க்கத்தையும், நரகத்தையும் பற்றி நிறைய அறிய வேண்டிய விசயம் இருக்கின்றது. நாம் பிறருக்கு துவா செய்யும் பொழுது இறைவா இவருக்கு ஜன்னத்துல் பிர்தௌஸ் எனும் சொர்க்கத்தை கொடுப்பாயாக என்று கூறுகின்றோம். ஆனால் நம்மில் பலருக்கு அச்சொர்க்கத்தை பெறுவதற்கு என்ன தகுதி வேண்டும் என்பது தெரிவதில்லை.

எல்லாம் வல்ல அல்லாஹ்வே சொர்க்கத்தையும் நரகத்தையும் படைத்தான். மனிதன் சொர்க்கத்திற்கும் நரகத்திற்கும் செல்வது அவன் வசமே உள்ளது. எனவே அதனை பற்றிய அல்லாஹ்வின் நிலைபாடு என்ன என்பதை யாராலும் கூற முடியாது. அல்லாஹ் ஏழு சொர்க்கத்தையும், எட்டு நரகத்தையும் படைத்திருக்கின்றான். ஒருவர் செய்யக்கூடிய நன்மை தீமையை பொருத்தே அவர்களுக்கு சொர்க்கம் நரகம் நிர்ணையிக்கபடும்.

ஒருமுறை நபி(ஸல்) அவர்கள் யுத்தத்திலிருந்து தோழர்களுடன் திரும்பும் போது ஒரு இடத்தில் சிறு குழந்தை ஒன்று அநாதையாக கிடந்தது. அதை கண்ட நபி(ஸல்) அவர்கள் "அக்குழந்தையை உரிமை கொண்டாட யாரும் இல்லை என்று கூறினார்கள். ஒரு பெண் அங்கு ஓடி வந்து அக்குழந்தையை தழுவலானாள். நபி(ஸல்) அவர்கள் அத்தாயைப் பார்த்து நாங்கள் இக்குழந்தையை நெருப்பில் கருக்கி விடலாம் என நினைதோம் என்றார்கள்.

இதனை கேட்ட அத்தாய் அழுது கொண்டே நெருப்பில் கருக்குவதற்கா என் குழந்தையை பத்து மாதம் சுமந்து பெற்றேன் என்று கூறியதும் நபி(ஸல்) அவர்கள் தோழர்களை பார்த்து பத்து மாதம் சுமந்து பெற்ற தாயே தன் குழந்தையை நெருப்பில் இடுவதை விரும்பவில்லை. அகில உலகின் இரட்ச்சகனாகிய அல்லாஹ் மனிதனை படைத்து உருவம், உயிர், உடைமை என அனைத்தையும் கொடுத்து உலகில் வாழ வைத்து பின் நரக நெருப்பிற்கு இரையாக்குவதையா விரும்புவான்? இல்லை மாறாக அம்மனிதன் சொர்க்கத்திற்கு செல்வதையே அல்லாஹ் விரும்புகின்றான்", என நபி(ஸல்)அவர்கள் சொர்க்கம் நரகம் பற்றி குறிப்பிடும் போது இவ்வாறு கூறினார்கள். 

அல்லாஹ் மனிதன் தீய வழியில் சென்று கெட்டுப் போவதை தடுக்கவே நபிமார்களை அனுப்பி வைத்தான். நபி(ஸல்) அவர்கள் தான் ஏன் இங்கு அனுப்பட்டேன் என்பதை மக்களுக்கு உணர்த்தும் விதமாக ஒரு மனிதன் காட்டில் தீ வைத்துக் கொண்டிருந்தான். அங்கு சில ஈசல்களும்,வெட்டிகளும் பறந்து வந்தன. அதை பார்த்த அம்மனிதன் அவைகளை இங்கே வர வேண்டாம் என கூறியும் அவைகள் நெருப்பில் கருகி சாம்பலாயின. இதை போன்று தான் மனிதன் தீய வழியில் செல்லும் போது, "நான் மனிதனின் இடுப்பை பிடித்து கொண்டு போய் விடாதீர்கள் என்று தடுக்கின்றேன்" என்று கூறினார்கள். தீய வழியில் இருந்து தடுப்பதற்காகவே ஒவ்வொரு கால கட்டத்திலும் அல்லாஹ் நபிமார்களை அனுப்பி வைத்தான்.

அல்லாஹ் ஜன்னத்துல் நயீம் என்னும் சொர்க்கத்தையும் படைத்திருக்கின்றான். அச்சொர்க்கத்தை பற்றி நபி(ஸல்) அவர்கள் குறிப்பிடும் போது, "குறைமாத குழந்தையாக பிறந்து இறந்து போன குழந்தை, சதை கட்டியாக இருந்து முழு உருவம் பெறாமல் வெளியாகிய குழந்தை, வயிற்றிலேயே இறந்து பிறந்த குழந்தைகள் ஜன்னத்துல் நயீம் என்னும் சொர்க்கத்தில் இருப்பார்கள்.

மேலும் இவர்களது பெற்றோர்களுக்கு நரகம் என தீர்ப்பளிக்கபட்டு அவர்கள் நரகத்தை நோக்கி சென்று கொண்டிருக்கும் போது அவ்விசயத்தை கேட்ட அக்குழந்தைகள் சொர்க்கத்திலிருந்து ஓடி சென்று தங்கள் பெற்றோருடன்  தாங்களும் நரகத்திரற்கு செல்வோம் என கூறும் பொழுது நரகத்தின் காவலாளியான மாலிக் சொர்க்கத்தில் உள்ளவர்கள் நரகத்திற்கு செல்ல அனுமதி இல்லை என்று கூறும் பொழுது அக்குழந்தைகள் நாங்கள் பெற்றோருடன் தான் செல்வோம் என்று கூறுவார்கள்.

இவர்களை காவலாளி மாலிக் அல்லாஹ்வின் சந்நிதானத்திற்கு அழைத்து செல்வார்கள்.அங்கு அல்லாஹ் அக்குழந்தைகளை நோக்கி ஏன் இவ்வாறு கூறினீர்கள் என்று கேட்க  அக்குழந்தைகள் அல்லாஹ்விடமும் நாங்கள் பெற்றோருடன் தான் இருப்போம் என அடம்பிடிப்பார்கள். கருணையோடு அல்லாஹ் அதனை ஏற்று கொண்டு அக்குழந்தைகளுடன் அப்பெற்றோர்களையும் ஜன்னத்துல் நயீம் சொர்க்கத்தில் நுழைய செய்வான்" என்று கூறினார்கள்.

அல்லாஹ் மகாமன் மஹ்மூது எனும் சொர்க்கத்தையும் படைத்திருக்கின்றான். குர்-ஆனில் இரண்டாவது அத்தியாயத்தில் இறுதி தூதர் கண்மணி நாயகம் (ஸல்) அவர்கள் மகாமன் மஹ்மூது எனும் சொர்க்கத்தில் இருப்பார்கள் என இறைவன் கூறிகிறான். பாங்கு துஆ நம்மில் பலரும் ஓதுவதில்லை. ஆனால் பாங்கு துஆவில் "எங்கள் நபிக்கு மகாமன் மஹ்மூது எனும் சொர்க்கத்தில் இருக்க செய்வாயாக" என்று பொருள் இருக்கின்றது. நபி(ஸல்) அவர்களுக்கு மகாமன் மஹ்மூது உறுதி செய்யப்பட்டுவிட்டது. பின் நாம் ஏன் கேட்க வேண்டும் என்று சொன்னால், இதில் இரு காரணங்கள் இருக்கின்றன.

1.மறுமையில் நபி(ஸல்) அவர்களுடைய சிபாரிசு கிடைக்கும்.

மக்கள் அவர்களின் நிலை என்னவாக இருக்குமோ என்று கதி கலங்கி கொண்டிருக்கையில் நபி(ஸல்) அவர்களுடைய சிபாரிசு கிடைக்குமானால் சற்று ஆறுதலாக இருக்கும் அல்லவா?

2.நபி(ஸல்) அவர்களுக்கு மகாமன் மஹ்மூது சொர்க்கம் கிடைக்க ஆசைப்பட்டோரில் ஒருவராக நாமும் இருக்க வேண்டும் என்பதற்காக வேண்டி இத்துஆவை ஓத வேண்டும்.

இறைவன் நரகத்தை பற்றி கூறுகையில் எட்டு நரகத்தை படைத்திருப்பதாக கூறுகின்றான். தன் திருமறையில் 70 வது அத்தியாயம் 4 முதல் 11 வசனங்கள் வரை அல்லாஹுத் தஆலா நரகத்தைப் பற்றி குறிப்பிடுகின்றான். நரகத்தினுடைய வேதனையை பார்த்து விட்டு மனிதன் தன் மனைவி மக்களை கொடுத்தாவது நரக வேதனையிலிருந்து தப்பிக்க வேண்டும் என்று எண்ணம் கொள்வான். நரகத்தினுடைய வேதனை எவ்வளவு கொடுமையானது என்பதை இதன் மூலம் தெரிந்து கொள்ளலாம்.

நபி(ஸல்) அவர்கள் நரகத்தைப் பற்றி கூறுகையில்,"எந்த மனிதன் உலகமே கதி, உலகத்தில் தான் விரும்பியது கிடைத்தால் போதும், உலகமே ஸ்தலம் என்று எண்ணிக் கொண்டிருக்கின்றானோ அவன் நரகத்திற்கு செல்வான். ஆசையை கொண்டு தான் சுவர்க்கம் மூடப்பட்டிருக்கின்றது" என்று கூறினார்கள்.

தடுக்கப்பட்டதை தவிர்த்து,இறைவனுடைய கட்டளைகளையும் நபி(ஸல்)அவர்களின் ஹதீதுகளையும் பின் பற்றி இறைவனுடைய நிஹ்மத்தை பெற்று சொர்க்கம் செல்ல எல்லா மனிதர்களும் முயற்சி செய்ய்ய வேண்டும். எல்லாம் வல்ல அல்லாஹ் துணை நிற்பானாக என்று பிராத்தித்த வண்ணம் தனது உரையை நிறைவு செய்தார்கள்.

சகோதரி அனிஷா பைசல்

No comments:

Post a Comment